வராஹி விரதம் நம் வாழ்க்கையை வளமாக்கும்…
வாழ்க்கையில் ஒரு சிலருக்கு எப்போதாவது பிரச்சினைகள் உருவாகும். ஒரு சிலருக்கோ பிரச்சினையே வாழ்க்கையாக அமையும். ‘நெஞ்சிற்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி’ என்று கவியரசு கண்ணதாசன் கூறியதை போல் அலைபாயும் மனதில் நிலையான நிம்மதி கிடைக்காது. இறைவனின் திருப்பெயரை இதயத்தில் பதித்து வைத்துக்கொண்டு தான் 24 மணி நேரமும் வாழ்கின்றோம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பதில்லை என்று நினைக்கின்றோம்.
வராஹி அம்மன்
பக்தர்களைப் பாதுகாப்பதிலும், எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் பெற்ற தெய்வமாகவும், தொல்லை தருபவர்களை விரட்டும் தெய்வமாகவும், தடைகளை நீக்கி இனிய வாழ்க்கையை கொடுக்கும் தெய்வமாகவும், செல்வத்தை உயர்த்திக் கொடுக்கும் தெய்வமாகவும் விளங்குவது வராஹி அம்மனாகும்.
அழகிய இளம் பெண்ணின் அமைப்புத் தோற்றத்தோடும் பன்றி முகத்தோடும் காட்சியளிக்கும் அந்தக் காவல் தெய்வத்தை இதயத்தில் பதித்து வைத்துக்கொண்டு விரதமிருந்து வழிபட்டால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பஞ்சமி திதியில் ‘வராஹி’ இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று விரதமிருந்து வழிபட்டால் பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.